Thursday 26 August 2010

24.9.2020 அன்றைய தலைப்புச் செய்திகள்

மல்லாக்கப் படுத்து வீட்டின் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருந்த நான் கால எந்திரத்தில் 2020-க்குப் பயணித்தால் என்ன எனத் திடீரென்று தோன்றியது. மூளையைக் கசக்கி அங்கு பத்திரிகைகளில் நான் படித்த தலைப்புச் செய்திகளே இவை.

குறிப்பு : இதில் கூறப்படும் செய்திகள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவை அல்ல; சிரித்துவிட்டு மறந்துவிடுங்கள்; சிரித்துவிட்டு சில விஷயங்களைக் குறித்துச் சிந்தித்தாலும் சரி.

தேதி : 24.9.2020

1. ஸ்பைடர்மேன் பாகம் 15 இன்று வெளியீடு

2. ஆஸ்திரேலியா எட்டாவது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றியது.

3. ஐஸ்வர்யாராயின் ஏழாவது திருமணம் - சல்மான், விவேக், அபிஷேக் பங்கேற்பு

4. பெட்ரோல் விலை சற்றே சரிவு – விலை லிட்டருக்கு ரூ. 999 மட்டுமே.

5. சன் டிவியில் "கோலங்கள்" 4,450 வது பாகத்தைத் தொட்டது.

6. இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கங்குலி தன் பதவியை ராஜினாமா செய்தார்.

7. திரிஷாவினுடைய இளைய மகள் ரஜினியின் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் பெயர் எம்.ஜி.ஆர்.

8. எட்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் 95 வயதாகும் கலைஞர் கருணாநிதி.

9. நடிகர் தனுஷுக்கும், இயக்குனர் சூர்யாவுக்கும் டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது தனியார் பல்கலைக்கழகம்.

10. வரலாறு காணாத உயர்வு : பங்குச் சந்தை சென்செக்ஸ் 34,000 புள்ளிகளைத் தொட்டது.

11. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உலகப்பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடம். அவரது சொத்துமதிப்பு 1,00,00,00,00,00,00,000 கோடி.

12. "கிரி டிவி" – மதுரையில் புதிய டிவி சேனலை அழகிரி துவக்கினார்.

13. நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை வேலைகள் விரைவில் முடிவடையும். நாடாளுமன்றத்தில் அமைச்சர் உறுதி.

14. காஷ்மீர் பிரச்சினையில் விரைவில் சுமூகத் தீர்வு காணப்படும் – பிரதமர் ராகுல் காந்தி அறிக்கை.

15. சுனாமி தாக்கியதில் கலிங்கப்பட்டிக்குள் தண்ணீர் புகுந்தது. எதிரிக்கட்சிகளின் திட்டமிட்ட சதி என வைகோ முழங்கினார்.

16. சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்.

17. இந்தியாவின் மக்கள்தொகை 220 கோடியை எட்டி மகத்தான சாதனை.

18. வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் இந்தியாவில் 43% பேர் என மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

19. பின்லேடன் சுற்றி வளைக்கப்பட்டான் – அமெரிக்கா அறிவிப்பு

20. ஓசோன் படலம் தடவப்பட்ட குடைகள் அமோக விற்பனை. இக்குடைகள் விற்பனையில் ரிலையன்ஸ் முன்னிலை.

21. தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 220 ஆக விலை குறைந்தது. சென்ற வாரம் அது 230 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

22. வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள் – விஜயகாந்த் அறிக்கை.

23. பிரேமானந்தாவின் அப்பீல் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அவர் நிரபராதி எனக் கூறி விடுவித்தார்.

24. அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு 95 MBPS - பி.எஸ்.என்.எல் வழங்குகிறது. மாத வாடகை ரூ. 51 மட்டுமே.

25. டாடா இண்டிகாம் தனது புதிய சலுகையை வெளியிட்டது. பத்துத் தலைமுறைக்கு வேலிடிட்டி உள்ள புதிய ப்ரீபெய்டு கார்டின் விலை ரூ. 69.

அதிலென்ன சந்தேகம்

ஆசிரியர் மாணவர்களுக்குக் கிருஷ்ண பகவானின் அவதார மகிமையைப் பற்றிய பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார்.

"கம்சனுடைய தங்கைக்கு எட்டாவதாகப் பிறக்கும் குழந்தை கம்சனைக் கொல்லும். இது விதி என அசரீரி கூறுகிறது. இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கம்சன் வாசுதேவனையும், தேவகியையும் ஒரு சிறையில் அடைக்கிறான்.

முதல் குழந்தை பிறக்கிறது. கம்சன் அதை விஷம் கொடுத்துக் கொல்கிறான். சிறிது காலம் கழித்து இரண்டாவது குழந்தை பிறக்கிறது. கம்சன் அதை மலை உச்சியிலிருந்து தூக்கிப்போட்டுக் கொன்றுவிடுகிறான். மேலும் சில காலம் கழித்து மூன்றாவது குழந்தை பிறக்கிறது. அதை..." ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டே போக, ஒரு மாணவன் எழுந்து கேட்கிறான்.

"சார் கிருஷ்ணாவதாரத்தில ஒரு சந்தேகம்"

"என்னப்பா சந்தேகம்? கிருஷ்ணாவதாரத்தில் மொத்த இந்தியாவுக்கும் வராத சந்தேகம் உனக்கெப்படி வந்தது? சொல்லுப்பா".

"சார்! தங்கைக்குப் பிறக்கப்போகும் எட்டாவது குழந்தைதான் கம்சனைக் கொல்லும் அப்படிங்கறது கம்சனுக்குத் தெரியும்தானே?"

"ஆமா! அதிலென்ன சந்தேகம்"?

"அப்புறம் எதுக்கு சார் இந்த கம்சன் வாசுதேவனையும், தேவகியையும் ஒரே சிறைக்குள்ள அடைக்கிறான். அவனுக்கு வெவரம் பத்தாதோ?"

அது டெலிபோன் டைரக்டரி சார்

சர்தார்ஜி கண்ணை மூடிக்கொண்டு கண்ணாடி முன் நிற்கிறார்.
மனைவி : என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
சர்தார் : நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது என் மூஞ்சி எப்படி இருக்கும்னு பார்க்கிறேன்.

***

சர்தார் ஒரு ஓவியக்கண்காட்சியில் நுழைகிறார்.
சர்தார் : இதென்ன.. பார்க்கவே கோரமா இருக்கே. இதைத்தான் மாடர்ன் ஆர்ட் அப்படினு சொல்றீங்களா?
கண்காட்சி நடத்துபவர் : நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கண்ணாடியை, ஓவியத்தை அல்ல.

***

சர்தாரும் அவர் மனைவியும் விவாகரத்துக் கோரி மனு செய்கின்றனர்.
ஜட்ஜ் : உங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்களே..அவர்களை எப்படிப் பகிர்ந்துகொள்ளப்போகிறீர்கள்?
சர்தார் : அவ்வளவுதானே..இப்போது போய்விட்டு மீண்டும் அடுத்த வருடம் மனுச் செய்கிறோம். உங்களுக்கும் கஷ்டம் இல்லாமப் போவும்.

***

பாண்டாசிங் : நான் லீவுக்கு ஊருக்குப் போறேன். நல்ல க்ரைம் நாவல் இருந்தாக் கொடுங்க, படிக்கிறதுக்கு..
சாண்டாசிங் : இந்த நாவல் படிங்க.. நிறைய கொலைகள் நடக்கும். ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்.
பாண்டாசிங் : அப்படியா!
சாண்டாசிங் : ஆமா... கடைசிப்பக்கம் படிக்கும்போதுதான் தெரியும், தோட்டக்காரன் தான் கொலைகாரன்னு.

***

சர்தார் : சார்..நான் ஒரு புக் போனவாரம் எடுத்துட்டுப் போனேன். ஆனால் என்னால அது என்ன கதைன்னு புரிஞ்சிக்கவே முடியல.. ஒரே நம்பரா இருக்கு.
நூலகர் : அடப்பாவி..அது டெலிபோன் டைரக்டரி சார். அதத்தான் ஒரு வாரமா தேடிட்டிருக்கேன்.

***

நண்பருக்கு போன் செய்தார் சாண்டாசிங்.
சாண்டாசிங் : இது 044-9234656 தானா?
எதிர்முனை : இல்லை. இது 044-9234657
(சில வினாடிகள் யோசித்த பின்)
சாண்டாசிங் : அப்படியா..ஒன்னும் பிரச்சனை இல்ல..பக்கத்து ரூம்ல இருக்கற என் நண்பரைக் கூப்பிடுங்க.

Traker

Pages

LinkWithin

Related Posts with Thumbnails