Tuesday, 16 February 2010

கிராமத்து கிரிக்கெட் நினைவுகள்..!

இந்தியா - இலங்கை டெஸ்ட் போட்டித் தொடர் நடக்கும் இந்த நேரத்தில், எங்கள் கிராமத்தில் நாங்கள் ஆடிய டெஸ்ட் மேட்ச் பற்றி எழுதிகிறேன்.
தஞ்சாவூருக்கு அருகில் நீடாமங்கலம். எங்களுடன் விளையாடிய சுவாரஸ்யமான ஒரு நபர் தான், இந்த அனுபவக் கட்டுரையின் நாயகன்.அவர் எங்கள் ஊரில் வசித்தாலும், பக்கத்துக்கு ஊரில் ஆசிரியராக வேலை பார்த்தார். அவர் பெயர் வேண்டாம்... "சார்" என்றே வைத்து கொள்வோம்.
சார் தன்னை லெக் ஸ்பின் பவுளர் என்று சொல்லி கொள்வார். ஆனால், பந்து அப்படி ஒன்றும் ஸ்விங் ஆகாது. கிரீஸுக்கு சற்று வெளியே மெதுவாய், நேராய் வந்து அல்வா போல இறங்கும். என்னை போன்ற படு சுமாரான பேட்ஸ் மேன் கூட வேண்டிய பக்கம் விளாசலாம்.
அவரது பவுலிங் ஆக்ஷ்ன் செம காமெடியாக இருக்கும். கையை முழுதாய் சுற்றி பந்தை எரியாமல், கக்கத்துக்கு கீழிருந்தே எறிவார். இது பார்க்க, சர்வ நிச்சயமான 'த்ரோ' போல் இருக்கும். ஆனால், தான் த்ரோ செய்வதாக சார் எப்போதும் ஒப்புக்கொள்ள மாட்டார்.
அவரை யாரவது த்ரோ செய்வதாக கேட்டால், தனது பவுலிங்கை யார் யார் எல்லாம் சரி என

ஒப்பு கொண்டனர் என்று பட்டியல் போடுவார். மேலும், பல உள்ளூர் - வெளியூர் ஜாம்பவான்கள் எல்லாம் தனது பவுலிங்கில் க்ளீன் பவுல்ட் ஆனதாகவும், வெங்கட் ராகவனுக்கு பிறகு சிறந்த ஸ்பின் பவுலர் என்றால், அது தான் தான் என்றும் கூச்சப்படாமல் அள்ளி விடுவார்.

அந்த காலக்கட்டத்தில் சார் வீட்டில் மட்டுமே டி.வி. இருந்ததால், அங்கு சென்று தான் கிரிக்கெட் மாட்ச் பார்ப்போம். ஆட்ட சுவாரஸ்யத்தில் யாராவது நகம் கடிச்சால் போச்சு... "அய்யயோ... எச்சில் பண்ணிட்டான்..." என உடனே கொல்லைக்கு கூட்டிட்டு போய் தண்ணீர் தந்து கையை கழுவ சொல்லி கூட்டி வருவார்.

இவர் குறித்த இரண்டு முக்கிய சம்பவங்களாவன:
சம்பவம் - 1
மன்னார்குடி டீமுடன் ஒரு கிரிக்கெட் மேட்ச் ஆட போயிருந்தோம். நான் அப்போது பார்வையாளர்தான். எங்கள் ஊர் "பெரிய டீம்" ஆடியது.
முதலில் மன்னார்குடி டீம் ஆடியது. செமையாய் அடி பின்னி எடுத்தனர். நடுவில் நம்ம சார் பவுலிங் போட வந்தார். முதல் பந்து போட்டதுமே "த்ரோ த்ரோ" என சிலர் கத்தினர்.
பின் ஒருவன் எழுந்து, "டேய் சும்மா இருங்கடா... ஆள் நல்லா அல்வா மாதிரி பந்து போடுறார்" என்றதும், பேசாமல் இருந்தனர். சார் பவுலிங்கில் (!!?) சும்மா வெளுத்து எடுத்தனர்.
சாரின் ஒரு பந்தை ஸ்ட்ரெயிட் பவுண்டரிக்கு அடித்தான் ஒரு பேட்ஸ்மேன். மிட் ஆஃப் அண்ட் லாங் ஆனில் நின்ற ஃபீல்டர்கள் போய் பந்தை எடுக்கவில்லை.
சார் கேட்டதற்கு, "நீங்களே போய் எடுத்துக்குங்க" என்று சொல்லி விட்டனர்!
சாருக்கெல்லாம் பவுலிங் தந்து மானத்தை வாங்குறாங்க என்று கேப்டன் மேல் கோபம் அவர்களுக்கு. பின், சாரே ஓடி போய் பவுண்டரியிலிருந்து பந்தை எடுத்து வந்து அடுத்த பந்தை வீசினார். இதை இன்னமும் சொல்லி சொல்லி சிரிப்போம்.
பின்னர், எங்க டீம் பேட்டிங் செய்து 40 ரன்னுக்கு ஆகியது ஆகியது. இதில் கடைசியாக இறங்கிய நம்ம சார் "0- நாட் அவுட்".
சம்பவம் - 2
தனது திறமையை டீம் சரியாக யூஸ் பண்ணலை என சாருக்கு ரொம்ப வருத்தம்.
மன்னார்குடி டீம் எங்களை மறுபடி ஃபாலோ ஆன் ஆட சொன்னது. சார் இந்த முறை ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக செல்வேன் என்றார்.
"வேண்டாம் சார். முதல் ஓவர் பாண்டியன் போடுவான். போன இன்னிங்க்ஸ்-ல் ஆறு விக்கெட் எடுத்தான் அவன்" என்றான் ஒருவன்.
சார், "போடா.. சோழனாவது.. பாண்டியனாவது," என்று முதல் ஆளாக பேட் செய்ய போய்விட்டார்.
முதல் ஓவர் பாண்டியன் தான் போட்டான்.
முதல் பந்து...
சாரின் ஸ்டம்ப்ஸ் ரெண்டு தெறித்து விழந்தது.
பேட்டை க்ரீஸ் அருகிலேயே வைத்து விட்டார், சார். (அவுட் ஆனால் பேட்-ஐ இப்படி வைத்து விட்டு வருவது சாரின் ஸ்டைல்).
அந்த மேட்ச்சில் வழக்கம் போல் தோற்றோம். ஆனாலும் இன்றும் அந்த மேட்ச் நினைவில் இருப்பதற்கு இந்த ரெண்டு நினைவுகளும் தான் காரணம்.
*
உங்களுக்கு ஏதேனும் கிராமத்து கிரிக்கெட் நினைவுகள் உண்டா..?

No comments:

Traker

Pages

LinkWithin

Related Posts with Thumbnails